வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் 'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தார் புதுச்சேரி சைதன்யா ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமனையின் தலைமை சித்த மருத்துவர் ஆர்.கல்பனா.